எல்.ஐ.சி. முகவரிடம் ரூ.10 லட்சம் மோசடி; கர்நாடகாவை சேர்ந்தவர் கைது


எல்.ஐ.சி. முகவரிடம் ரூ.10 லட்சம் மோசடி; கர்நாடகாவை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 14 May 2022 2:56 AM IST (Updated: 14 May 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி. முகவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த கர்நாடகாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்:

ரூ.10 லட்சம் மோசடி
அரியலூரை சேர்ந்தவர் கண்ணுப்பிள்ளை(வயது 63). எல்.ஐ.சி. முகவரான இவர், தனது செல்போனுக்கு வந்த அழைப்பை நம்பி ரூ.10 லட்சத்தை இழந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாஹால் என்ற கிராமத்தை சேர்ந்த பூபாலன்(36) என்பவர், தான் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு மொத்தமாக காப்பீடு பெற்றுத்தர கமிஷன் வேண்டும் என்றும், பாலிசிதாரர் செல்போன் எண்ணை பெற்று, அதன்மூலம் கண்ணுப்பிள்ளையை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து சிறிது, சிறிதாக ரூ.10 லட்சம் வரை எடுத்து மோசடி செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து பூபாலனை நேற்று கைது செய்த சைபர் கிரைம் போலீசார் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், இணைய மோசடிக்கு பயன்படுத்திய ஏ.டி.எம். கார்டு, வங்கி கணக்கு புத்தகம், செக் புத்தகம், செல்போன்கள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பூபாலனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட இணைய குற்றத்தடுப்பு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.

Next Story