கோவில்களில் பிரதோஷ வழிபாடு


கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 14 May 2022 2:56 AM IST (Updated: 14 May 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள பயறணீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திபெருமானுக்கு பால், தயிர், இளநீர், திரவியப்பொடி, பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நந்திபெருமானுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் உடையார்பாளையம் தெற்கு வாணிப தெருவில் உள்ள காமூண்டிஸ்வர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நந்தி பெருமானுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்திபெருமானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Next Story