கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எடியூரப்பாவுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எடியூரப்பாவுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்
பெங்களூரு: பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வசிக்கும் காவேரி இல்லத்திற்கு நேற்று காலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்றார். அங்கு அவர், எடியூரப்பாவை சந்தித்து பேசினார். இருவரும் 20 நிமிடங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனையின் போது மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எடியூரப்பாவிடம் சில கருத்துகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேட்டு அறிந்து கொண்டார். அதே நேரத்தில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பிற தலைவர்களை சந்தித்து பேசியது குறித்தும் எடியூரப்பாவிடம், பசவராஜ் பொம்மை பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், யாரை பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்தும் எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை ஆலோசித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் வேட்பாளர்கள் தேர்வில் பா.ஜனதா மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு இறுதியானது என்று, பசவராஜ் பொம்மையிடம் எடியூரப்பா கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது பசவராஜ் பொம்மையுடன் மந்திரி கோவிந்த் கார்ஜோள் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story