பூட்டப்பட்ட தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை


பூட்டப்பட்ட தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 May 2022 3:18 AM IST (Updated: 14 May 2022 3:18 AM IST)
t-max-icont-min-icon

பூட்டப்பட்ட தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கீழப்பழுவூர்:

நிதி நிறுவனத்தை முற்றுகை
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வைப்புத்தொகை மற்றும் சேமிப்பு தொகையை கட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சங்கத்தில் இருந்து பணம் வசூல் செய்வதற்கு யாரும் வராத நிலையில், அந்த நிதி நிறுவனமும் பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை.
மேலும் நிதி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு பொதுமக்கள் கட்டும் பணத்திற்கு உத்தரவாதம் அளித்த நபரும் பணத்திற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று விலகிக் கொண்டதால் பணம் கட்டிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய பொதுமக்கள் மற்றும் தின சேமிப்பு பணம் கட்டியவர்கள் நேற்று அந்த நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணமோசடி
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பழுவூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிடம் மனு கொடுத்தனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், இந்நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக தெரிகிறது. மேலும் நிதி நிறுவனத்தால் வழங்கப்பட்ட காசோலை நிதி நிறுவனத்தின் கணக்கில் பணம் இல்லை என திரும்பி உள்ளதால், பணத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story