தனியார் கல்லூரியில் கொள்ளையடித்த வாலிபர் கைது


தனியார் கல்லூரியில் கொள்ளையடித்த  வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 May 2022 9:50 PM GMT (Updated: 13 May 2022 9:50 PM GMT)

மார்த்தாண்டத்தில் தனியார் கல்லூரியில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, பணம் மீட்டப்பட்டது.

குழித்துறை:
மார்த்தாண்டத்தில் தனியார் கல்லூரியில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, பணம் மீட்டப்பட்டது. 
பணம், நகை கொள்ளை
மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஞானதீபம் என்ற பெயரில் சமுதாய கல்லூரி உள்ளது. இதை மார்த்தாண்டம் அருகே உள்ள பேரை பகுதியை சேர்ந்த தோமஸ்ராஜ் நடத்தி வருகிறார். 
கடந்த 9-ந் தேதி மாலையில் வழக்கம் போல் கல்லூரியை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் பணம், 1½ பவுன் தங்க மோதிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. 
மர்ம ஆசாமி கல்வி நிறுவனத்தின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பணம், நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
கண்காணிப்பு கேமரா காட்சி
இதுதொடர்பாக தோமஸ்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீசார் கல்லூரியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது ஒரு வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது.
அந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் மார்த்தாண்டம் குருவிக்காட்டுவிளையை சேர்ந்த ரங்கநாதன் மகன் பிரகாஷ் (வயது27) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே குறுந்தாடி வைத்திருந்தார். கல்லூரியில் கொள்ளையடித்த பின்பு அடையாளம் தெரியாமல் இருக்க தாடியை எடுத்துவிட்டதும் தெரிய வந்தது. 
இதையடுத்து போலீசார் நேற்று காலையில் பிரகாசின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். 
பணம்-நகை மீட்பு
அவரிடம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கல்லூரியில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். கொள்ளையடித்த தங்க மோதிரத்தை காப்புக்காட்டில் அடகு வைத்திருப்பதாக கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று நகையை மீட்டனர். மேலும் அவரிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தையும் போலீசார் மீட்டனர்.
கொள்ளை நடந்த 4-வது நாளிலேயே கொள்ளையனை கைது செய்து பணமும், நகையும் மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story