நடிகை ரம்யா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட் இடையே வார்த்தை மோதல்


நடிகை ரம்யா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட் இடையே வார்த்தை மோதல்
x
தினத்தந்தி 14 May 2022 3:28 AM IST (Updated: 14 May 2022 3:28 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசில் தொடரும் சம்பவமாக நடிகை ரம்யா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் வழக்கில் ஜாமீனில் இருப்பவர் எனது நேர்மை பற்றி பேசுவதாக நடிகை ரம்யா பதிலடி கொடுத்துள்ளார்

பெங்களூரு: காங்கிரசில் தொடரும் சம்பவமாக நடிகை ரம்யா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் வழக்கில் ஜாமீனில் இருப்பவர் எனது நேர்மை பற்றி பேசுவதாக நடிகை ரம்யா பதிலடி கொடுத்துள்ளார்.

அஸ்வத் நாராயணுக்கு ஆதரவு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமாக இருப்பவர் ரம்யா. இவர், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரி அஸ்வத் நாராயணுக்கு இடையிலான மோதல் விவகாரத்தில் அஸ்வத் நாராயணுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது அஸ்வத் நாராயணும், காங்கிரஸ் பிரசார குழு தலைவராக உள்ள எம்.பி.பட்டீலும் ரகசியமாக சந்தித்து பேசியதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அஸ்வத் நாராயணுக்கு ஆதரவாக நடிகை ரம்யா கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக டி.கே.சிவக்குமாருக்கும், நடிகை ரம்யாவுக்கும் இடையே மோதல் உண்டாகி இருப்பதாக பா.ஜனதா குற்றச்சாட்டுகூறி இருந்தது. இந்த நிலையில் மைசூரு மாவட்டத்தில் நேற்று இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் முகமது நலபட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

எந்த பொறுப்பில் இருக்கிறார்?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்த போது நடிகை ரம்யாவை எனக்கு தெரியும். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறாரா?, எந்த பொறுப்பில் இருக்கிறார்? என்பது தெரியவில்லை. நடிகை ரம்யாவுக்கு டி.கே.சிவக்குமாரை தெரியும். எம்.பி.பட்டீலை தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர், 2 பேரையும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம். டுவிட்டர் மூலமாக மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பேசி இருப்பது சரி இல்லை.

எங்களது தலைவரை பற்றி பேசிய ரம்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். காங்கிரஸ் கட்சியின் தொண்டனாகவும், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்து கூறுகிறேன். எங்களது கட்சி தலைவரை பற்றி பேசியதால், ரம்யாவுக்கு எதிராக பேச வேண்டிய இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பற்றி ரம்யா பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. ரம்யாவின் உடல்நிலை சரியில்லை. அவர் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 
ஜாமீனில் வெளியே இருப்பவர்...

இந்த நிலையில், முகமது நலபட் கருத்துக்கு நடிகை ரம்யா டுவிட்டர் மூலமாக பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இளைஞர் காங்கிரஸ் தலைவரான முகமது நலபட் நேர்மையானவர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான முகமது ஹாரீசின் மகன். தாக்குதல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே இருந்து வரும் முகமது நலபட் எனது நேர்மை பற்றி பேசி இருக்கிறார், என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நடிகை ரம்யாவுக்கும், முகமது நலபாட்டுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. அதே நேரத்தில் நடிகை ரம்யாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று முகமது நலபாட் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரிஸ்வான் அர்ஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Next Story