கார் மோதி வாலிபர் பலி; போலீசார் வராததை கண்டித்து சாலை மறியல்
கார் மோதி வாலிபர் உயிரிழந்தார். அங்கு போலீசார் வராததை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் ஏழுமலை (வயது 35). இவர் நேற்று இரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முருக்கன்குடி பிரிவு சாலையை கடந்து செல்ல முயன்ற போது, அதே சாலையில் திருச்சி நோக்கி வேகமாக வந்த கார் ஏழுமலை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த அவரது உறவினர்களும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வராத மங்களமேடு போலீசாரை கண்டித்தும், விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு வந்த மங்களமேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டனர். இதையடுத்து ஏழுமலை உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story