அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிகொலுசு உற்பத்தியாளர்களுக்கு பல்நோக்கு கட்டிடம் கட்ட இடம் தேர்வு அமைச்சர் கே.என்.நேரு தகவல்


அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிகொலுசு உற்பத்தியாளர்களுக்கு பல்நோக்கு கட்டிடம் கட்ட இடம் தேர்வு அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x
தினத்தந்தி 14 May 2022 4:30 AM IST (Updated: 14 May 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்களுக்கு பல்நோக்கு கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சேலம், 
வெள்ளி கொலுசுகள் உற்பத்தி
சேலம் கருப்பூர் அருகே புதிய தொழில் நுட்ப பூங்கா அமைய உள்ள இடம், மல்லமூப்பம்பட்டியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைய உள்ள இடம், அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுக்கு தனியாக பல்நோக்கு கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக புதிய பல்நோக்கு கட்டிடம், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கருப்பூரில் தொழில் நுட்ப பூங்கா ஆகியவை அமைக்கப்படும் என்று அறிவித்தார். 
 பல்நோக்கு கட்டிடம்
சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெள்ளிக்கொலுசுகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டம், அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்களுக்கு ஒரு ஏக்கர் 20 சென்ட் பரப்பளவில் பல்நோக்கு கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்களுக்கு பல்நோக்கு கட்டிடம் அமைக்கப்படுவதால் சேலம் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளி தொழிலாளர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுவார்கள். அதே போன்று, மல்லமூப்பம்பட்டியில் 184 ஏக்கரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
40 ஆயிரம் பேருக்கு வேலை
இங்கு நூல் பதனிடுதல், நெசவு, ஜவுளி உற்பத்தி, துணி பதனிடுதல் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி போன்ற தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் பயனடைவார்கள். இதன்மூலம் சேலம் மண்டலத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், 30 முதல் 40 ஆயிரம் வரை பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஆய்வில் கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், உதவி கலெக்டர் (பொறுப்பு) வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story