பள்ளி மாணவ, மாணவிகளின் உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள்


பள்ளி மாணவ, மாணவிகளின் உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 May 2022 6:27 PM IST (Updated: 14 May 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவ, மாணவிகளின் உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டாக்டர்கள் உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள் விடுத்தார்.
பயிற்சி வகுப்பு
இளம்வயது திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழுமையான அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி சிறார் நலத்திட்ட மருத்துவர்களுக்கான தலைமை பயிற்றுனர் பயிற்சி வகுப்பு நேற்று நாமக்கல்லில் நடந்தது. இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வளரிளம் பெண்கள் 18 வயதிற்கு முன்னர் தாய்மை அடைந்தால், அவர்களது பிரசவத்தின் போது தாய் சேய் இறப்பு, பெண் குழந்தைகளின் கல்வி பாதிப்பு, உடல் நலக்குறைவு, பிறக்கும் குழந்தைக்கு உடல் மற்றும் மன வளர்ச்சிக்குறைவு ஆகிய பிரச்சினைகள் உண்டாகின்றன.
பள்ளி சிறார் நலத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆண் மருத்துவர்கள், 15 பெண் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து பள்ளிகளுக்கும் சென்று, மாணவ, மாணவிகளுக்கு கண்பார்வை பரிசோதனை, காது கேட்பு பரிசோதனை, உடல் நல பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவைப்பட்டால் இருதய பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு அவர்களுக்கு கண் கண்ணாடி வழங்குதல், காது கேட்கும் கருவி வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உளவியல் ரீதியான பிரச்சினை
இவற்றோடு மருத்துவர்கள் தாங்கள் செல்லும் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ரீதியான பிரச்சினைகளையும் தெரிந்து அவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும், உரிய ஆலோசனைகளை வழங்கி உதவ வேண்டும். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை ஆசிரியர்களின் உதவியோடு மேற்கொள்ள வேண்டும்.
இதற்கான தலைமை பயிற்றுனர்களாக தற்போது பயிற்சி பெற்று உள்ளீர்கள். நீங்கள் பணிபுரியும் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உங்களை தொடர்பு கொண்டு தங்களது சுகாதார சந்தேகங்களை தெரிந்து கொள்ளும் வகையில் உங்களுடைய தொலைபேசி எண்களை பள்ளிகளில் தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் இளம்வயது திருமணம் நடைபெறாத, பாலியல் துன்புறுத்தல்கள் நிகழாத விழிப்புணர்வு பெற்ற இளைய தலைமுறையை உருவாக்க, உங்கள் பங்களிப்பை உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் இளம் சிறார் நலத்திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் ரமேஷ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் உள்பட இளம் சிறார் நலத்திட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story