ரேஷன் கடை அமைத்து தர கோரி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ரேஷன் கடை அமைத்து தர கோரி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பரமத்திவேலூர்:
வேலூரில் வேறு இடத்தில் ரேஷன் கடை அமைத்து தர கோரி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ரேஷன் கடை
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு வடக்கு நல்லியாம்பாளையத்தில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் வெட்டுக்காட்டு புதூர், கணபதி நகர், பொன்னி நகர் மற்றும் வெட்டுக்காட்டு புதூர் காலனியை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒரு கிலோ மீட்டர் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிரமம் அடைந்து வருகின்றனர். சிரமத்தை போக்கும் வகையில் 3-வது வார்டுக்குட்பட்ட வெட்டுக்காட்டு புதூரில் ரேஷன் கடை அமைப்பதற்கு அரசுக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே வெட்டுக்காட்டு புதூரில் ரேஷன் கடை அமைக்க கோரி 1-வது மற்றும் 3-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரமத்திவேலூர் தாசில்தாரிடம் மனு கொடுப்பதற்காக நேற்று காலை வந்தனர்.
பேச்சுவார்த்தை
ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் தாசில்தார் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் அங்கு சென்று முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கு வந்த தாசில்தார் கண்ணனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்று கொண்ட தாசில்தார் அதனை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். எனினும் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story