தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு


தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு
x
தினத்தந்தி 14 May 2022 6:38 PM IST (Updated: 14 May 2022 6:38 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

தேனி:

சித்திரை திருவிழா

தேனி அருகே வீரபாண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. வருகிற 17-ந்தேதி வரை இந்த திருவிழா நடக்கிறது.

அந்த திருவிழாவுக்காக கோவில் பகுதியிலும், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு வகையிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

இதுபோன்ற கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு தாராளமாக உள்ளது. தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். 

அவ்வாறு வரும் மக்கள் திரும்பிச் செல்லும் போது தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளில் பொருட்களை வாங்கிச் செல்லும் நிலைமை உள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்பட்டு, குப்பைகளாக தூக்கி வீசப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

தரமற்ற உணவு

இதேபோல் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட சில கடைகளில் உணவுப் பொருட்கள் தரமற்றதாக உள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்து திருவிழா தொடங்கிய முதல் நாளில் சோதனை நடத்திய அதிகாரிகள், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கோவில் சுற்றுப் பகுதிகளில் திருவிழாவுக்காக தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன. அந்த கழிப்பிடங்களும் சுகாதாரமற்ற வகையில் துர்நாற்றம் வீசி வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில், கழிப்பிடங்களே நோய் பரப்பும் இடமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கட்டாய வசூல்

இந்து சமய அறநிலையத்துக்கு உட்பட்ட கோவில்களில் முடிகாணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. 

வீரபாண்டியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதற்காக முல்லைப்பெரியாற்றுக்குள் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு பக்தர்களிடம் ரூ.100 முதல் ரூ.300 வரை கட்டாய வசூல் செய்யப்படுகிறது.

எனவே, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகிற வீரபாண்டி திருவிழாவில் சுகாதார பிரச்சினை மற்றும் முறைகேடுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றின் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story