ராசிபுரத்தில் பயங்கரம்: தொழிலாளி குத்திக்கொலை 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
ராசிபுரத்தில் பயங்கரம்: தொழிலாளி குத்திக்கொலை 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
ராசிபுரம்:
ராசிபுரத்தில் கூலித்தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலித்தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவருடைய மகன் ஈஸ்வரன் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா (19). நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரன் அந்த பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது வெளியில் சென்றிருந்த சுகன்யா வீட்டிற்கு வந்தார். அங்கு கணவர் ஈஸ்வரன் கழுத்தில் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர்.
தீவிர விசாரணை
இதுகுறித்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஈஸ்வரனின் மனைவி மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது கொலையாளிகள் யார்? எதற்காக ஈஸ்வரன் கொலை செய்யப்பட்டார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர் வந்து தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து ஓடி அருகில் உள்ள தேவாலயம் பகுதியில் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொலை தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பரபரப்பு
கொலை செய்யப்பட்ட ஈஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ராசிபுரம் நகர மைய பகுதியில் கூலித்தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story