நடத்தையில் சந்தேகத்தால் காதல் மனைவி கத்தியால் குத்திக்கொலை; துணி வியாபாரி கைது


நடத்தையில் சந்தேகத்தால் காதல் மனைவி கத்தியால் குத்திக்கொலை; துணி வியாபாரி கைது
x
தினத்தந்தி 14 May 2022 8:29 PM IST (Updated: 14 May 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த துணி வியாபாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:

நடத்தையில் சந்தேகம்

  டெல்லியை சேர்ந்தவர் சுனில். இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இதுபோல ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா ஜானிகெரே கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பலதா. இவர் மாதநாயக்கனஹள்ளியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்தார். இதனால் சுனிலுக்கும், புஷ்பலதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

  இதன்பின்னர் 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் புஷ்பலதா, மாதநாயக்கனஹள்ளியை சேர்ந்த ரங்கநாத் என்பவருடன் பழகி வந்தார். அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதனால் புஷ்பலதாவின் நடத்தையில் சுனிலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரங்கநாத்துடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி புஷ்பலதாவிடம், சுனில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

குத்திக்கொலை

  இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினமும் சுனில், புஷ்பலதா இடையே பிரச்சினை உண்டானது. அப்போது ரங்கநாத்தை தனது வீட்டிற்கு வரவழைத்த சுனில், ரங்கநாத்திடமும் தகராறு செய்தார். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த சுனில் சமையல் அறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்து புஷ்பலதாவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த புஷ்பலதா பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரங்கநாத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

  இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்த மாதநாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் புஷ்பலதாவை, சுனில் கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை கைது செய்தனர். ரங்கநாத்திடமும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story