பஸ்-கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி


பஸ்-கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 14 May 2022 8:56 PM IST (Updated: 14 May 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

பஸ்- கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேசுமுகிபேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மகன் கபிலன் (வயது 22). இவர், சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை வீட்டில் இருந்து தனது காரில் செங்கல்பட்டு வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பஸ் கபிலனின் கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர் கபிலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

விபத்து நடந்த உடன் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு கீழே இறங்கி ஓடினர். காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில் பலத்த சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த திருக்கழுக்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, காருக்குள் சிக்கி கொண்ட கபிலனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் பலியான கபிலன் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழ்மணியின் மகள் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story