கே.புதுப்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
கே.புதுப்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
மோகனூர்:
மோகனூர் ஒன்றியம் கே.புதுப்பாளையம் ஊராட்சி பகுதியில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
பதிவேடுகள்
மோகனூர் ஒன்றியம் கே.புதுப்பாளையம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி கே.புதுப்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டதோடு, ஊராட்சி செயலாளர் மற்றும் ஒன்றிய பொறியாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
இதையடுத்து வள்ளியப்பம்பட்டி புதுார் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.6.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை பார்வையிட்ட கலெக்டர் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளபடி அளவுகள் உள்ளதா? என அளந்து பார்த்தார்.
மரக்கன்றுகள்
பின்னர் குட்டலாம்பாறை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.8.22 லட்சம் மதிப்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டதோடு, ரூ.1 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தில் விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப மண்புழு உரம் வழங்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து குட்டலாம்பாறையில் பயன்பாடின்றி உள்ள ஆழ்துளை கிணறு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, கே.புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னம்மாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story