தனியார் இசேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்


தனியார் இசேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்
x
தினத்தந்தி 14 May 2022 8:59 PM IST (Updated: 14 May 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

தனியார் இசேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்

தளி:
உடுமலை பகுதியில் செயல்பட்டு வருகின்ற தனியார் இ-சேவை மையங்கள் பொதுமக்களிடம் அதிகப்படியான கட்டண வசூலித்து வருகின்றது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கட்டாய வசூல்
பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு துறைகள் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சேவைகளை அளித்து வருகிறது. அதன்படி சாதி, வருமானம், முதல்பட்டதாரி, இருப்பிடம், விதவை, ஆதார் திருத்தம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணையவழியாக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அரசு இ-சேவை மையங்களில் ஏற்படுகின்ற சர்வர் கோளாறு பணியாளர் விடுமுறை மற்றும் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் சான்றுகளை பெறமுடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இதை சாதகமாக கொண்டு தனியார் இ-சேவை மையங்கள் அரசு அனுமதியுடன் செயல்படத்தொடங்கின. இதையடுத்து பொதுமக்களும் அவற்றை நாடிச்சென்று தீர்வு கண்டு வருகின்றனர். இந்த சூழலில் உடுமலை பகுதியில் செயல்பட்டு வருகின்ற தனியார் இ-சேவை மையங்கள் பொதுமக்களிடம் அதிகப்படியான கட்டணத்தை வலுக்கட்டாயமாக வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
சர்வர் கோளாறு
ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை அளிப்பதற்காக சான்றுகள் வழங்கும் நடைமுறையை இணையவழியாக்கம் செய்தது. இதனால் பொதுமக்கள் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலகம் என எங்கும் சென்று கால் கடுக்க காத்திருந்து காலநேரத்தையும், பணத்தையும் விரையம் செய்து சான்றிதழ் பெறும் நடைமுறை மாறியது. இது வரவேற்கத்தக்க போற்றத்தக்க ஒன்றாகும்.
 ஆனால் காலப்போக்கில் அரசு இ-சேவை மையங்களில் ஏற்பட்ட சர்வர் கோளாறு, பணியாளர் பற்றாக்குறை மற்றும் விடுமுறை காரணமாக பொதுமக்கள் குறித்த காலத்தில் சான்றிதழ் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதையடுத்து அரசு அனுமதியுடன் தனியார் இ-சேவை மையங்கள் செயல்பட தொடங்கியது.
வியாபார நோக்கத்துடன்...
ஆரம்ப காலத்தில் நல்ல முறையில் செயல்பட்டு வந்த தனியார் இ-சேவை மையங்கள் காலப்போக்கில் பொதுமக்களிடம் அதிக கட்டணத்தை வசூலித்தும் அழைக்கழித்தும் வருகிறது. முழுக்க முழுக்க வியாபார நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்ற அவற்றால் பொதுமக்கள் வருமான இழப்பை சந்தித்து வருகின்றனர். 
மேலும் சான்றுகள் பெறுவதற்கான கட்டணம் அவற்றுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து அறிவிப்பு பதாகையும் பார்வையில் படும் விதமாக அலுவலகத்தில் வைக்கவில்லை. அத்துடன் சான்றுக்கு விண்ணப்பிக்கும்போது அசல் ஆவணங்களை இணைப்பதில்லை விவரங்களையும் சரியாக பதிவு செய்வதில்லை.
அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை
இதனால் பொதுமக்கள் மீண்டும் மீண்டும் தனியார் இ-சேவை மையங்களை நாடிச்செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் தயாரான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதற்கும் கூடுதலாக பணமும் பெற்று வருகின்றனர்.
 இதுகுறித்து அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எனவே உடுமலை பகுதியில் செயல்பட்டு வருகின்ற தனியார் இ-சேவை மையங்களில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதுடன் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்ற தனியார் இ-சேவை மையங்களின் உரிமத்தை ரத்து செய்வதற்கும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story