ஊட்டியில் 17-வது ரோஜா கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது


ஊட்டியில் 17-வது ரோஜா கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
x
தினத்தந்தி 14 May 2022 9:13 PM IST (Updated: 14 May 2022 9:13 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் 17-வது ரோஜா கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது. 31 ஆயிரம் ரோஜா மலர்களால் ஆன மரவீடு சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது.

ஊட்டி 
ஊட்டியில் 17-வது ரோஜா கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது. 31 ஆயிரம் ரோஜா மலர்களால் ஆன மரவீடு சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது.

ரோஜா கண்காட்சி

இந்தியாவின் தலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் ஆண்டு தோறும் கோடை விழாக்களான காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண் காட்சி, பழக் கண்காட்சி போன்று பல்வேறு விதமான கண்காட்சிகள் தோட்டகலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.  இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 11-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, கூடலூரில், 9-வது வாசனை திரவிய கண்காட்சி  நடந்தது. இதன் தொடர்ச்சியாக ஊட்டியில் 17-வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் அம்ரித் உடன் இருந்தார். 

31 ஆயிரம் வண்ண ரோஜாக்களால் ஆன மரவீடு

விழாவில் சிறப்பம்சமாக சுமார் 31 ஆயிரம் வண்ண ரோஜாக்களை கொண்டு 15 அடி உயரத்தில் மரவீடு அமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும், குழந்தைகளை கவரும் விதமாக கார்ட்டூன் கதாபாத்திர வடிவமான மோட்டு, பட்லு, மான், பியானோ மற்றும் பனி மனிதன் போன்ற வடிவங்களும், தமிழ்நாடு அரசின் புதிய திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை அனைவரும் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மஞ்சப்பை போன்ற வடிவங்களும் சுமார் 50 ஆயிரம் ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்டம்

இதர மாவட்டங்களான நெல்லை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட தோட்ட கலைத்துறையினரால் ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, உதவி இயக்குநர் அனிதா, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் அங்கிருந்த ரோஜா செடிகளுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று தெரிகிறது. முன்னதாக நேற்று நடக்க இருந்த தொடக்க விழா ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவையொட்டி நடைபெறவில்லை.

Next Story