விவசாயியை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலி கணவருடன் கைது


விவசாயியை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலி கணவருடன் கைது
x
தினத்தந்தி 14 May 2022 9:13 PM IST (Updated: 14 May 2022 9:13 PM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடி அருகே விவசாயியை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலி, கணவருடன் கைது செய்யப்பட்டார்.

கன்னிவாடி:

தூக்கில் தொங்கிய விவசாயி

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கசவனம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தபாண்டி (வயது 42). விவசாயி. இவருக்கு திருமணமாகி பூங்காணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 
இந்தநிலையில் இன்று காலை ஆனந்தபாண்டி, அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவருக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆனந்தபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் இதுகுறித்து பூங்காணி கொடுத்த புகாரின்பேரில் ஆனந்தபாண்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

திடுக்கிடும் தகவல்கள்
இந்தநிலையில் சந்தேகத்தின்பேரில் மாட்டுக்கொட்டகை உரிமையாளரான மணிகண்டனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். 
அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கள்ளக்காதல் விவகாரத்தில் மணிகண்டனும், அவரது மனைவி கருமணி செல்வியும் சேர்ந்து ஆனந்தபாண்டியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- 
ஆனந்தபாண்டியும், மணிகண்டனும் நண்பர்கள். இதனால் மணிகண்டன் வீட்டிற்கு ஆனந்தபாண்டி அவ்வப்போது வந்து சென்றார். அப்போது அவருக்கும், மணிகண்டனின் மனைவி கருமணி செல்விக்கும் (36) இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருவானது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். 

கள்ளக்காதலி கைது
இந்தநிலையில் நேற்று  மாலை மணிகண்டனுக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகையில் உள்ள அறையில் ஆனந்தபாண்டியும், கருமணி செல்வியும் தனிமையில் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மணிகண்டன், தனது மனைவியும், நண்பனும் ஒன்றாக இருப்பதை பார்த்தார். அப்போது தான் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனுக்கு தெரியவந்தது. 
மேலும் ஆத்திரமடைந்த அவர், ஆனந்தபாண்டியை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதிய மணிகண்டன், ஆனந்தபாண்டியை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர், தனது மனைவி கருமணி செல்வியுடன் சேர்ந்து ஆனந்தபாண்டியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவரது உடலை மாட்டுக்கொட்டகையில் தூக்கில் தொங்கவிட்டு சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது மனைவி கருமணி செல்வி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரிடமும் போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். 
கணவருடன் சேர்ந்து விவசாயியை கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் கன்னிவாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story