5 பெண்கள் குளத்தில் மூழ்கி பலி
பர்பானி அருகே துணி துவைக்க சென்றபோது தாய், மகள்கள் உள்பட 5 பேரும் குளத்தில் மூழ்கி பலியாகினர்.
மும்பை,
பர்பானி அருகே துணி துவைக்க சென்றபோது தாய், மகள்கள் உள்பட 5 பேரும் குளத்தில் மூழ்கி பலியாகினர்.
துணி துவைக்க சென்றனர்
பர்பானி மாவட்டம் பாலம் தாலுகா ராமபுர்தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் ராதாபாய் ஆடே (வயது45). இவரது மகள்கள் திக்சா (20), காஜல் (19). அதே பகுதியை சேர்ந்த சுஷ்மா ராதோடு (21), அருணா ராதோடு (25). இவர்கள் அனைவரும் கடந்த 5 மாதமாக அகமதுபூர் தாலுகாவில் கரும்பு வயல்களில் கூலி வேலை செய்து வந்தனர்.
சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் துல்சிராம் தாண்டா கிராமத்தில் உள்ள குளத்தில் துணி துவைக்க 5 பேரும் சென்றிருந்தனர். அப்போது 5 பேரில் ஒருவர் திடீரென தண்ணீரில் தவறி உள்ளே விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த அவரை காப்பாற்ற மற்ற 4 பேரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே குதித்தனர்.
5 பேர் பலி
ஆனால் 5 பேரும் யாரையும் காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் மூழ்க தொடங்கினர். இது பற்றி அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். தண்ணீரில் மூழ்கியவர்களை தீயணைப்பு படையினரின் உதவியால் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது 5 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த தாய், மகள்கள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story