காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் தொல்லியல் ஆய்வு


காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் தொல்லியல் ஆய்வு
x
தினத்தந்தி 14 May 2022 9:26 PM IST (Updated: 14 May 2022 9:26 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் தொல்லியல் ஆய்வு செய்தனர்.

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழக தமிழ்த்துறையில் கல்வெட்டு சான்றிதழ் படிப்பு பயிலும் மாணவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாடியூர், எழுத்துப்பாறை, பட்டாணி கோயில், கரட்டுப்பட்டி, திண்டுக்கல் மலைக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள தொல்லியல் களங்கள் மற்றும் கல்வெட்டுகளைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சீலைப்பாடி அருகிலுள்ள பாடியூரில் அக்கம்மா கோவிலின் அருகில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட சிதிலமடைந்த கோட்டையின் நுழைவுவாயில் காணப்படுகிறது. இங்கே உள்ள பள்ளிக்கூடம் அருகே பழங்காலத்துப் பானை ஓடுகள், எலும்புத்துண்டு முதலான சிலவற்றை மாணவர்கள் கண்டெடுத்தனர்.
நாயக்கர் காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட கோட்டை இன்று சிதைந்து மண்மேடாக காட்சியளிக்கிறது. கோட்டையின் நுழைவுவாயில் மட்டும் சிதையாமல் கம்பீரமாக கோட்டைக்கான இருப்பை அடையாளப்படுத்தி நிற்கிறது.
பாடியூருக்கு அருகில் பட்டாணி ராவுத்தர் கோயில் ஒன்று உள்ளது. இங்குதான் முஸ்லிம்களுக்கும் ஆங்கிலேய படைகளுக்கும் போர் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. போரில் இறந்த முஸ்லிம் வீரர்கள் பலர் கிராம தெய்வமாக வழிபடப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் அருகே கரட்டுப்பட்டியில் பாண்டியர் காலத்து கல்வெட்டை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டையில் உள்ள பத்மகிரீஸ்வரர் கோவில், பாண்டியர் கால மீன் சின்ன பொறிப்புகள், கல் மண்டபம், கல்வெட்டுகள், போர் பாசறைகள் போன்றவற்றை மாணவர்கள் ஆய்வு செய்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த பயணம் குறித்து காந்திகிராம பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் ஒ.முத்தையா கூறுகையில், தமிழக வரலாறு மண்மேடுகளிலும், மலைப்பாறைகளிலும், சிதைந்துபோன சிற்பங்களிலும், கோவில் வழிபாடுகளிலும் உறைந்து கிடக்கின்றது. இதனை மீட்டெடுக்க வேண்டும். புதிய வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என்றார். காந்திகிராம பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர்கள் சிவா, ராஜேஷ்கண்ணா மற்றும் கோட்டைப்பட்டி ராமையன் ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டினர். 



Next Story