உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள்  சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 May 2022 9:27 PM IST (Updated: 14 May 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழில் அமைப்பு தலைவர்கள் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.
பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை
பனியன் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை அபரிமிதமாக உயர்ந்ததால் பின்னலாடை தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசும்போது, ‘நூல் விலை உயர்வால் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பி 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை இயங்கி வருகிறது. பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்து நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
சங்கத்தின் பொருளாளர் யுவா தேவராஜ் வரவேற்றார். துணை தலைவர்கள் காருண்யா கார்த்திகேயன், அபிந்தரா மணி, துணை செயலாளர் செந்தூர் முத்துகிருஷ்ணன், ஒருங்கிணைப்புக்குழு தலைவர் முத்துசாமி, துணை தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாதனை படைப்போம்
சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் பங்கேற்று பேசியதாவது:-
பின்னலாடை தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். திருப்பூர் மாநகரம் என்ற சிறிய ஊரில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறோம். பின்னலாடை தொழில் பல்வேறு காலங்களில் நெருக்கடிகளையும், வேதனைகளையும் தாண்டி சாதனைகளை படைத்து வருகிறது. இந்த சோதனை காலமும் மாறி சாதனை படைப்போம். பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். யூகபேர வணிக பட்டியலில் இருந்து பஞ்சை நீக்க வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்துக்கு பிறகு நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சைமா பொதுச்செயலாளர் பொன்னுசாமி பேசும்போது, ‘நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்திய பருத்தி கழகம் விவசாயிகளிடம் இருந்து பருத்தியை கொள்முதல் செய்து நேரடியாக நூற்பாலைகளுக்கு பஞ்சை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் இடைத்தரகர்கள் பஞ்சை பதுக்கி வைத்து செயற்கை விலையேற்றத்தை ஏற்படுத்துவது தடுக்கப்படும். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
வாழ்வாதாரம் கேள்விக்குறி
டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் பேசியதாவது:-
10 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக பின்னலாடை தொழில் உள்ளது. 18 மாதங்களாக நூல் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. பஞ்சு விலையேற்றத்தை காரணம் காட்டி நூற்பாலைகள் நூல் விலையை அதிகரிக்கிறார்கள். அபரிமிதமான நூல் விலையேற்றத்தால் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பனியன் தொழில் பாதிக்கப்பட்டால் திருப்பூரில் ஒட்டுமொத்த வர்த்தகமும் வீழ்ச்சியடையும்.
பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இடைத்தரகர்கள் பஞ்சை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளோம். பனியன் தொழில் சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு வர்த்தக மக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த போராட்டம் முழு அளவில் வெற்றி பெற ஓட்டல்கள், பேக்கரிகள், வணிக நிறுவனங்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 2 நாட்கள் வேலைநிறுத்தத்தை விடுமுறை என நினைத்து வெளியூர் செல்லாமல் உணர்வுபூர்வமாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி பேசியதாவது:-
ஜவுளித்தொழில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. மூலப்பொருளான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளோம். தொழில் அமைப்பினர் தங்கள் நிறுவனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். ஒட்டுமொத்த எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் நமது போராட்டம் அமைய வேண்டும்.
வெளிமாநில, வெளிமாவட்ட மக்கள் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த தொழில் நன்றாக இருந்தால் மட்டுமே திருப்பூரில் வர்த்தகம் பெருகும். தொழிலாளர்களும் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி வருகிற 17-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அதிலும் முழு ஆதரவு தெரிவித்து பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றுபட்டு போராடினால் வெற்றி
டீமா செயலாளர் செந்தில்குமார் பேசும்போது, ‘18 மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருகிறது. பின்னலாடை தொழில் முடக்கம் குறித்து மத்திய அரசிடம் பல்வேறு கட்டமாக முறையிட்டு விட்டோம். இதுவரை செவிசாய்க்காமல் உள்ளது. தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள், நூல் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு வலிமையுடன் தெரிவிக்க வேண்டும். ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்’ என்றார்.
சைமா சங்க துணை தலைவர் கோவிந்தப்பன் பேசும்போது, ‘நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் துணை செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Next Story