நூலகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக நூலகரை அடித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விருத்தாசலம்
அடித்துக்கொலை
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் எடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(வயது 75). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான இவர் நூலகராக பணிபுரிந்து வந்தார். தேர்தல் முன்விரோதம் காரணமாக இவரை அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை, அவரது கணவர் விஷ்ணு(28), மாமனார் கலியன் உள்பட 7 பேர் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் விஷ்ணு, கலியன், சகோதரர் அஜய்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை, உறவினர் சுப்ரமணியன், விஷ்ணுவின் வடமாநில உறவினர்கள் இருவர் உள்பட 7 பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு, கலியன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மணிமேகலை உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
உறவினர்கள் சாலை மறியல்
இந்நிலையில் பெரியசாமி கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் விருத்தாசலம் அருகே உள்ள விளாகாட்டூரில் விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமறைவாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பெரியசாமியின் உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story