கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு டெய்லர் தற்கொலை செய்து கொண்டார்


கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு டெய்லர் தற்கொலை செய்து கொண்டார்
x
தினத்தந்தி 14 May 2022 10:15 PM IST (Updated: 14 May 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு டெய்லர் தற்கொலை செய்து கொண்டார்


போத்தனூர்

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு டெய்லர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

டெய்லர்

கோவை போத்தனூர் லோகநாதபுரம் முதலியார் வீதியை சேர்ந்தவர் மல்லையாசாமி (வயது 65), டெய்லர் கடை நடத்தி வந்தார். 

இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு பவானி சங்கர் (வயது 38), சத்தியநாராயணன் (35) என்ற 2 மகன்கள் இருந்தனர். 

இதில் பவானிசங்கருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவருக்கு திருமணமாகவில்லை.

சத்தியநாராயணன் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணமாகிவிட்டது.

 இதனால் அவர் தனது பெற்றோர் வீட்டின் அருகிலேயே தனது மனைவியுடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி உயிரிழந்துவிட்டார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன் பவானி சங்கரை மல்லையாசாமி கவனித்து வந்தார்.

முனகல் சத்தம்

தினமும் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் சத்தியநாராயணன், தனது தந்தை மற்றும் அண்ணனை பார்த்துவிட்டு அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்புவது வழக்கம். 

அதன்படி அவர் நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், தனது தந்தை மற்றும் அண்ணனை பார்க்க சென்றார்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. 

இதையடுத்து அவர் கதவை தட்டினார். ஆனால் பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. 

சிறிது நேரத்தில் வீட்டுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

2 பேர் உயிரிழப்பு

அப்போது அங்கு தனது தந்தையும், அண்ணனும் சாணி பவுடரை (விஷம்) குடித்துவிட்டு மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

 இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மல்லையாசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பவானி சங்கருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 

இருந்த போதிலும் சில நிமிடங்களிலேயே அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மகனை கொன்று தற்கொலை

முதற்கட்ட விசாரணையில், விஜயலட்சுமி உயிரிழந்த பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை மல்லையாசாமி கவனித்து வந்தார். 

தற்போது அவருக்கு வயதாகிவிட்டதால் மகனை சரியாக கவனிக்க முடியவில்லை.

 இதன் காரணமாக தனக்கு பின் அவரை யார் கவனிப்பது என்ற கவலை அவருக்கு ஏற்பட்டது. 

எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மல்லையாசாமிக்கு தான் உயிரிழந்துவிட்டால் மகனை கவனிப்பது யார் என்று எண்ணினார். 

எனவே மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து கடைக்கு சென்று சாணிப்பவுடர் (விஷம்) வாங்கி வந்த அவர் அதை தண்ணீரில் கலந்து, தனது மனதை கல்லாக்கிக்கொண்டு தனது மகன் பவானி சங்கரின் வாயில் ஊற்றினார். 

அதை அவர் குடித்ததும் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கினார். 

பின்னர் தானும் அதை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகிறார்கள்.

கோவையில் பராமரிக்க முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story