நீடாமங்கலம் பகுதியில் குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை
நீடாமங்கலம் பகுதியில் குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கோடையின் தாக்கம் சற்று தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீடாமங்கலம்:-
நீடாமங்கலம் பகுதியில் குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கோடையின் தாக்கம் சற்று தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாட்டி வதைத்த வெயில்
தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. கோடை காலம் தொடங்கியதும் வெயில் சுட்டெரித்து வந்தது. நண்பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
வெயிலின் தாக்கத்தை கணிக்க இளநீர் மற்றும் குளிர்பானங்களை தேடி மக்கள் செல்ல நேரிட்டது. திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
அசானி புயல்
கோடை காலத்தின் தொடக்கத்திலேேய வெயில் சுட்டெரித்ததால் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்குமோ? என மக்கள் அச்சத்தில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அசானி புயல் உருவானதால் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. ஆனாலும் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக இங்கு மழை மேகம் அடிக்கடி திரண்டாலும் மழை பெய்யவில்லை. மாறாக காற்று வீசியது. நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டியது.
பரவலாக மழை
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியது. அதைத்தொடர்ந்து மழை பெய்தது. குளிர்ந்த காற்று மற்றும் மழையால் கோடையின் தாக்கம் சற்று தணிந்து காணப்பட்டதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நீடாமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழையுடன் இடி-மின்னலும் இருந்தது. இடையிடையே மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story