திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு புதிய பஸ்நிலையம் அமையும் இடத்தையும் பார்வையிட்டார்


திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு புதிய பஸ்நிலையம் அமையும் இடத்தையும் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 14 May 2022 4:47 PM GMT (Updated: 14 May 2022 4:47 PM GMT)

திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் புதிய பஸ்நிலையம் அமைய உள்ள இடத்தில் நடைபெறும் பணியையும் அவர் பார்வையிட்டார்.


திண்டிவனம், 

திண்டிவனத்திற்கு நேற்று  நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வருகை தந்தார்.
தொடாந்து அவர் நகராட்சி பகுதியில் உள்ள நுண் உரம் தயாரிக்கும் மையத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு இருந்த ஊழியர்களிடம் இயற்கை உரம் தயாரிப்பது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். 

நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும், மக்காத குப்பகைள் என்று தரம் பிரித்து மக்கும் குப்பைகளை இயற்கை உரம் தயாரிப்பதற்கும், மக்காத குப்பைகளை சாலைப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தும் விதமாக  பணிகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்கி, அதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என்றார்.

பாதாள சாக்கடை திட்ட பணி

மேலும், குப்பை சேமிப்புக் கிடங்கை சுற்றி பாதுகாப்பு கொட்டகைகள் அமைத்து பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள தேவையான பணிகளை மேற்கெளர்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இதேபோல், திண்டிவனம் நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.268 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தீர்த்தக் குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் உந்து நிலையம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,  பாதாள சாக்கடை திட்டத்தில்  குழாய்கள் அமைக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதிய பஸ்நிலையம்

மேலும்,  திண்டிவனத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.25.50 கோடியில் அமைய இருக்கும் புதிய பஸ்நிலையத்துக்கான இடத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளையும் கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் மோகன்,  திண்டிவனம் சப்- கலெக்டர் அமித், தமிழ்நாடு குடிநீர் தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன், மேற்பார்வை பொறியாளர்கள் பழனிவேல், விஜயன், சுற்றுச்சூழல் கண்காணிப்பு அலுவலர் வைத்தீஸ்வரன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், 

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அன்பழகன், திண்டிவனம் நகராட்சி தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், நகராட்சி ஆணையர் பொறுப்பு தனபாண்டியன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story