சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் பொதுமக்கள் திடீர் முற்றுகை


சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர்  பொதுமக்கள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 14 May 2022 10:21 PM IST (Updated: 14 May 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர்


சிதம்பரம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு

கோர்ட்டு உத்தரவின் பேரில் சிதம்பரம் ஓமகுளம், தச்சன் குளம், ஞானப்பிரகாசம் குளம், தில்லைக் காளியம்மன் கோவில் ஓடை, குமரன் குளம், பாலமான் வாய்க்கால் கரை உள்ளிட்ட பல்வேறு பகுதி நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை, வருவாய்துறை, நகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கேட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள அம்பேத்கர் தெருவில் பாலமன் வாய்க்கால் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் இடிக்க வந்த போது அங்குள்ள ஆண்களும், பெண்களும் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி வீடுகளை காலி செய்ய மறுத்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வீடுகளை காலி செய்வதற்கு அவகாசம் வழங்கிய அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். 

கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தொடர்ந்து நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமையில், நகராட்சி நகர மன்ற துணைத் தலைவர் முத்து, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு வி.எம்.சேகர், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நீதி வளவன், ராஜேஷ், சரித்திரன், மாறன் மற்றும் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மக்கள் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அம்பேத்கர் தெரு பகுதி மக்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு, வீடுகளை இடிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்க சென்றனர். ஆனால் கோட்டாட்சியர் இல்லாத காரணத்தால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் மனுவைக் கொடுத்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story