தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாகன ஓட்டிகள் அவதி 
அரியலூர்-ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் காட்டுபிரிங்கியம் மற்றும் சின்ன நாகலூர் பாதை பகுதியில் சாலையின் இருபுறமும் சுண்ணாம்புக்கல் மண் தேங்கி கிடக்கின்றன. இவை மழைபெய்யும் போது சேறும், சகதியுமாகவும், வெயிலின் போது புழுதி பறப்பதினாலும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காட்டுபிரிங்கியம், அரியலூர். 
அக்னியாறு வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி பொதுப்பணி துறையின் கீழ் வரும் ஐயங்காடு அருகே அமைந்துள்ள அக்னியாறு அணைக்கட்டு வாய்க்காலை தூர்வாரிட கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் தூர்வாரப்படாததால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக நல்ல மழை பொழிவு இருந்தும் அனைத்து மழைநீரும் கடலை நோக்கி வீணாக செல்கிறது. தற்போது 2 வாய்க்காலும் ஆக்கிரமிப்பு மற்றும் கருவேல மரங்களாலும் மண்டிகிடக்கிறது. அக்னியாறு அணைக்கட்டை தூர்வாரிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
துவார் ரெங்கராஜன், கறம்பக்குடி, புதுக்கோட்டை. 
ஆபத்தான மின்கம்பம் 
புதுக்கோட்டை மாவட்டம், நிஜாம்காலனி ஏ.எம்.ஏ. நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டு அதில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 
முகமது ஷாஜஹான், நிஜாம்காலனி, புதுக்கோட்டை. 

Next Story