தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
தொடர் மழை
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணையில் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி கிருஷ்ணகிரி அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீரை திறக்கும் சூழல் ஏற்படும் என்பதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி ஆகும். தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 47 அடியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவை பொருத்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட வேண்டி உள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story