தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்கள், கடற்கரை பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்கள், கடற்கரை பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூய்மைப்பணி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை பாரத திட்டத்தின்கீழ், தூய்மை பணியாளர்கள், கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவ-மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் இணைந்து சுற்றுப்பகுதிகளை தூய்மைபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். பூங்கா, ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா மற்றும் திரேஸ்புரம் கடற்கரை பகுதிகளில் தூய்மைப்பணி நடந்தது.
அமைச்சர் கீதாஜீவன்
இதன் தொடக்க விழா தூத்துக்குடி எம்.ஜி.ஆர். பூங்காவில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாக தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறும்.
சுகாதாரம்
எம்.ஜி.ஆர். பூங்கா, ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா மற்றும் திரேஸ்புரம் கடற்கரை பகுதிகளில் தூய்மைப்பணி நடந்தது. இந்தப் பணியில் கல்லூரி மாணவ-மாணவிகள் 400 பேர், 400 துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பொதுமக்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வாழ்வதற்கு மாநகராட்சி மூலம் இந்த தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கமே மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும், தூய்மையை கடைபிடிக்க வேண்டும், சுகாதாரத்தையும் பேண வேண்டும் என்பதே ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கழிவுகள்
முன்னதாக அமைச்சர் கீதாஜீவன், தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் சாலையோரங்களில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை சேகரித்து அவற்றை மக்கும், மக்காத கழிவுகளாக பிரித்தெடுத்து பின்னர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் கூடங்களில் சேகரித்து மண்புழு உரங்கள் தயாரிக்கும் திட்டத்திற்காக மாநகராட்சி மூலம் புதிதாக வாங்கப்பட்ட 4 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், பொன்னப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி மேயர் வேண்டுகோள்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கான சிறந்த மாநகராட்சி என்ற சிறப்பான அடைமொழியுடன் தூத்துக்குடி மாநகராட்சி செயல்பட்டு வருவது மிகவும் சிறப்பானது ஆகும்
மாநகராட்சி நிர்வாகம் மாநகரை சுத்தமான, சுகாதாரமான நகரமாகவும், குப்பைகளே இல்லாத நகரமாகவும் மாற்றிடும் வகையில் தூய்மைப்பணிகளை நாள்தோறும் மேற்கொண்டு வந்தாலும் இதற்கு மாநகரிலுள்ள வணிகர்கள், பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் முழுஒத்துழைப்பு தந்திடவேண்டியது மிகவும் அவசியமாகும்.
குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும். வீடுகள், தெருக்கள், கடைகள் முன்பு தேவையில்லாமல் குப்பைகளை போடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். குப்பைத்தொட்டிகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என குப்பைகளை தரம் பிரித்து கொட்டவேண்டும், தூத்துக்குடி மாநகராட்சியை குப்பை இல்லாத தூய்மையான மாநகராட்சியாக மாற்றிட அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story