சுட்டெரிக்கும் கோடை வெயிலால் விழுப்புரத்தில் நுங்கு விற்பனை அமோகம்
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் விழுப்புரத்தில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது.
வெயிலின் கொடுமையால் பொதுமக்கள் மிகவும் வாடி, வதங்கி வருகின்றனர். பெரும்பாலான பொதுமக்கள், வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
இந்த வெயிலில் இருந்து தப்பிக்கவும், வெப்பத்தை தணிக்கவும் பொதுமக்கள் குளிர்பான கடைகளை நாடிச்செல்கின்றனர். மேலும் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டு ஓரளவு வெப்பத்தின் தாக்கத்தை தணித்து வருகின்றனர்.
நுங்கு விற்பனை
இதனால் சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது நுங்கு விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.
விழுப்புரம் நகரில் சென்னை- திருச்சி நெடுஞ்சாலை, பழைய பஸ் நிலையம், திரு.வி.க.சாலை, ரங்கநாதன் சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரமாக நுங்குகளை குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதுபற்றி நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கிய போது, வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது கோடை மழை பெய்தது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நுங்கு விற்பனை சற்று குறைவாக இருந்தது. இந்த சூழலில் தற்போது மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்கிறார்கள். இதனால் நுங்கு விற்பனை தற்போது மேலும் சூடுபிடிக்கும் என்றார்.
Related Tags :
Next Story