தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேட்டி
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தர்மபுரியில் கூறினார்.
தர்மபுரி:
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தர்மபுரியில் கூறினார்.
நீர்ப்பாசன திட்டங்கள்
தர்மபுரியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் 10 லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி தமிழக அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க சிப்காட் தொழிற்பேட்டையை விரைவாக தொடங்க வேண்டும்.
தர்மபுரி- மொரப்பூர் ரெயில் பாதை திட்டத்திற்கு எனது தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டத்தை விரைவாக தொடங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் அறிவிப்பு நிலையிலேயே உள்ளன. அவற்றை விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் விபத்துகளில் ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கிறார்கள். விபத்துக்களை தடுக்க மாற்று திட்டத்தை ரூ.450 கோடி மதிப்பில் செயல்படுத்த வேண்டும்.
அனைத்து கட்சி கூட்டம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்கள் எளிதாக அனைவருக்கும் கிடைக்கும் நிலை உள்ளது. போலீசாருக்கு தெரியாமல் போதை பொருட்களை விற்பனை செய்ய முடியாது. தமிழக முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், உயரதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை நடத்தி போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தற்கொலை செய்யும் நிலை அதிகரித்துள்ளது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் முழுமையாக தடை செய்ய வேண்டும்.
உண்மையான எதிர்க்கட்சி
தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படுகிறது. பா.ம.க.வை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 90 சதவீதம் இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் 10 மாதங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்று விட்டது. அந்த பணியை சுகாதார துறை மூலம் அரசு சிறப்பாக செய்து உள்ளது. அதே நேரத்தில் தேர்தல் வாக்குறுதியில் அளித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த கூடாது.
தமிழகத்தில் 18 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இந்தத் திட்டங்களை செயல்படுத்தினால் மின்வெட்டு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story