சொத்து மதிப்பீட்டிற்கான படிவம் வீடு, வீடாக வினியோகம்
2-வது மண்டலத்தில் சொத்து மதிப்பீட்டிற்கான படிவம் வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட்டது.
வேலூர்
தமிழகத்தில் சொத்து வரி சீராய்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக வீடு, வணிகம், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், காலிமனைகள் உள்ளிட்டவற்றின் தற்போதைய அளவு கணக்கீடும் பணி நடக்கிறது.
வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்களிலும் உள்ள சொத்துகள் மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சொத்து மதிப்பீடு செய்வதற்கான படிவம் பொதுமக்களிடம் வழங்கப்படுகிறது.
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் சொத்துகளை மதிப்பீடு செய்வதற்கான படிவம் வினியோகத்தை உதவி கமிஷனர் வசந்தி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சத்துவாச்சாரி சவுத்அவென்யூ சாலை, 2-வது மண்டல அலுவலக சாலையில் உள்ள வீடு, கடைகளுக்கு நேரில் சென்று படிவங்கள் வழங்கினார். அப்போது கட்டிட ஆய்வாளர் மதிவாணன், வருவாய் ஆய்வாளர் குமரவேலு மற்றும் பலர் உடனிருந்தனர்.
படிவத்தில், சொத்தின் உரிமையாளர் பெயர், இருப்பிட விவரம், தற்போதைய வரி விவரம், மனையின் முழு பரப்பளவு, கட்டிடத்தின் அளவு, கட்டிடம் கட்டப்பட்ட ஆண்டு, கட்டுமானத்தின் வகை, கட்டிடத்தின் பயன்பாடு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தன.
அவற்றை பூர்த்தி செய்து மண்டல அலுவலகம் அல்லது மாநகராட்சி வருவாய் அலுவலர்களிடம் வழங்கும்படியும், படிவத்தில் குறிப்பிட பட்டதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாநகராட்சி அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொள்வார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story