கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க. கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு
கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க. கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விராலிமலை:
விராலிமலை தாலுகா விராலூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் லெட்சுமிகாந்தன். இவருக்கு நேற்று காலை ராமகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி அங்கு மேப்பூதகுடி அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ள சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் அள்ளிகொண்டிருந்தனர். அவர்களிடம் உரிய அனுமதி பெற்று மண் அள்ள வேண்டும். தற்போது மண் அள்ள அனுமதி இல்லை கூறி அவர்களை எச்சரித்துவிட்டு தனது அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து விராலூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த கவுன்சிலர் சுப்பிரமணியன் அங்கு பணியில் இருந்த லெட்சுமிகாந்தனிடம் நாங்கள் உரிமம் பெற்று மண் அள்ள முடியாது என்றும், 50 நபர்களை கொண்டு தாலுகா அலுவலகம் முன்பு மறியல் செய்வேன் என்று கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விராலிமலை தாசில்தார் சரவணனிடம், கிராம நிர்வாக அலுவலர் லெட்சுமிகாந்தன் புகார் அளித்தார். அதைதொடர்ந்து தாசில்தார் சரவணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அ.தி.மு.க. கவுன்சிலர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story