மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்:கோட்டார், குழித்துறை மறைமாவட்ட ஆலயங்களில் 3 நாட்கள் திருப்பலி


மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்:கோட்டார், குழித்துறை மறைமாவட்ட ஆலயங்களில் 3 நாட்கள் திருப்பலி
x
தினத்தந்தி 15 May 2022 12:35 AM IST (Updated: 15 May 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

மறைசாட்சி தேவசகாயத்துக்கு வாடிகனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இதையொட்டி கோட்டார், குழித்துறை மறைமாவட்ட ஆலயங்களில் 3 நாட்கள் திருப்பலி நடந்தது.

நாகர்கோவில், 
மறைசாட்சி தேவசகாயத்துக்கு வாடிகனில் புனிதர் பட்டம் வழங்குவதையொட்டி கோட்டார், குழித்துறை மறைமாவட்ட ஆலயங்களில் 3 நாட்கள் திருப்பலி நடந்தது.
புனிதர் பட்டம்
குமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்தவர் மறைசாட்சி தேவசகாயம். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1745-ம் ஆண்டு தேவசகாயம் என்ற பெயரில் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மாறினார். அதன்பிறகு மக்களுக்கு நற்செய்தி அறிவித்ததோடு, மக்கள் அனைவரும் சமம் என்றும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் தாழ்ந்தவர், உயர்ந்தவர் என பேசுவதும், செயல்படுவதும் தவறு என்றும் போதித்தார்.
இதனால் அவர் பல கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டு இறுதியாக 1752-ம் ஆண்டு ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மறைசாட்சியாக, ஏசுவின் கொள்கைகளுக்காக ரத்த சாட்சியாக இறந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது. அதை ஏற்றுக்கொண்ட கத்தோலிக்க திருச்சபை அவருக்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலய சதுக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணியளவில் (இந்திய நேரப்படி) புனிதர் பட்டம் வழங்குகிறது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகிறார். அவருடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் 9 மறைசாட்சிகளுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.
3 நாட்கள்...
இந்த விழாவில் மத்திய- மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் கலந்து கொள்கிறார்கள். கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் அருட்பணியாளர்கள், கோட்டார், குழித்துறை மறைமாவட்ட மக்கள் என ஏராளமானோர் விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த விழாவையொட்டி கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களுக்கு உட்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் முன்தயாரிப்பு திருப்பலிகள் கடந்த 3 நாட்களாக நடந்தன. 3-வது நாளான நேற்று கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமான புனித சவேரியார் பேராலயம் உள்ளிட்ட 2 மறைமாவட்டங்களின் அனைத்து ஆலயங்களிலும் காலை, மாலை வேளைகளில் முன்தயாரிப்பு திருப்பலி நடந்தது.
நன்றி திருப்பலி
இன்று புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி நன்றி திருப்பலி பல ஆலயங்களில் நடைபெற இருக்கிறது. குறிப்பாக தேவசகாயம் தொடர்புடைய பகுதிகளான கோட்டார் புனித சவேரியார் பேராலயம், நட்டாலம் ஆலயம், புலியூர்குறிச்சி ஆலயம், காற்றாடிமலை ஆலயம், மேலப்பெருவிளை ஆலயம், ராமன்புதூர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் நன்றி திருப்பலிகள் நடைபெற உள்ளது. இந்த நன்றி திருப்பலி வெவ்வேறு நாட்களில் நடைபெற உள்ளன. தொடர்புடைய ஆலயங்கள் தவிர பிற ஆலயங்களிலும் நன்றி திருப்பலி நடைபெற உள்ளது.

Next Story