நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும்; பயணிகள் வலியுறுத்தல்


நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும்; பயணிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2022 12:41 AM IST (Updated: 15 May 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை -தாம்பரம் சிறப்பு ரெயில், தாம்பரம் ரெயில் நிலையத்தை காலை 8 மணிக்குள் சென்றடையும் வகையில் ரெயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை:
நெல்லை -தாம்பரம் சிறப்பு ரெயில், தாம்பரம் ரெயில் நிலையத்தை காலை 8 மணிக்குள் சென்றடையும் வகையில் ரெயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை -தாம்பரம் சிறப்பு ரெயில்
நெல்லையில் இருந்து சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 17-ந்தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையில் இருந்தும், வியாழக்கிழமை தோறும் தாம்பரத்தில் இருந்தும் புறப்படுகிறது. வருகிற ஜூன் மாதம் வரை இந்த ரெயில் இயக்கப்படுகிறது. 
இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இருக்கைகள் நிரம்பி வழிகிறது.

நேரம் பிரச்சினை
நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ெரயில் தென்காசிக்கு இரவு 8.30 மணிக்கு வந்தடைகிறது. அங்கு திசை மாற்றி இயக்க வேண்டி இருப்பதால் முன்பக்க என்ஜின் கழற்றி மறுமுனையில் பொருத்தப்படுகிறது. இரவு 9 மணிக்கு தென்காசியில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 11.15 மணிக்கு விருதுநகர் ெரயில் நிலையத்தை அடைகிறது. அங்கு டீசல் என்ஜின் கழற்றப்பட்டு, மின்சார என்ஜின் இணைக்கப்படுகிறது. பொதுவாக என்ஜின் மாற்றம் செய்வதற்கு 20 நிமிடங்கள் தான் ஆகும். ஆனால் இந்த சிறப்பு ரெயில் விருதுநகரில் மேலும் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
அதன்பின்னர் திருச்சி ரெயில் நிலையத்தை கால அட்டவணைக்கு 30 நிமிடங்கள் முன்னதாகவே சென்றடைந்து விடுகிறது. விழுப்புரம் ரெயில் நிலையத்தை 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்றடைந்து விடுகிறது. விழுப்புரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இடையே நிறுத்தி வைக்கப்பட்டு செல்கிறது. செங்கல்பட்டு -தாம்பரம் இடையே 30 கி.மீ. தூரத்தை அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அரை மணி நேரத்தில் கடக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த சிறப்பு ரெயில் 1 மணி நேரம் எடுத்துக் கொண்டு காலை 9.15 மணிக்கு சென்றடைகிறது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது.

பயணிகள் அவதி
இதே வழித்தடத்தில் இயங்கும் பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் மெயில் ஆகியவை அதிக நிறுத்தங்களில் நின்று சென்றாலும் 10 மணி நேரத்தில் தாம்பரத்தை சென்றடைகின்றன. ஆனால் இந்த சிறப்பு ரெயில் அதிக நிலையங்களில் நிற்காமல் சென்றாலும் 12 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர்.
எனவே இந்த ரெயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கோரிக்கை 
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்குவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 
அதே நேரத்தில் இந்த சிறப்பு ரெயில் காலை 8 மணிக்குள் தாம்பரத்தை சென்றடையும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்து ரெயிலின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். மேலும் இந்த ரெயில் இடைப்பட்ட ரெயில் நிலையங்களில் 2½ மணி நேரம் நிறுத்தி வைப்பதை தவிர்த்து தொடர்ந்து ஓடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Next Story