தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து இடையூறு
திருவண்ணாமலை நகராட்சியில் சன்னதி தெருவில் இருந்து கோபால் விநாயகர் கோவில் தெரு வழியாக அண்ணாசாலைக்கு செல்லும் பாதை உள்ளது. இது குறுகலான தெருவாக இருந்தாலும் இதில் முக்கியமான சில கடைகள் உள்ளதால் வாகனப் போக்குவரத்து பரவலாகக் காணப்படும். இந்த நிலையில் நேற்று காலை அந்த தெருவுக்கு அரசு வாகனத்தில் வந்தவர்கள் நடு ரோட்டிலேயே காரை நிறுத்தி விட்டு கடைக்குச் சென்று விட்டனர். இதனால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் அடிக்கடி வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அந்த பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாமல் வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்த வேண்டும். இதை அடிக்கடி போலீசார் கண்காணிக்க வேண்டும்.
-லிங்கம், திருவண்ணாமலை.
மணல் திருட்டு
வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே பாலாற்றில் தினமும் இரவில் வாகனங்களில் மணல் திருடும் சம்பவம் நடந்து வருகிறது. இதுபற்றி மாவட்ட அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
-ராஜமாணிக்கம், சேண்பாக்கம்.
நச்சுப்புகையால் சுவாச பிரச்சிைன
குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை 2-வது ஆண்டியப்ப ஆச்சாரி தெரு சந்திப்பில் கோவில் அருகில் குப்பைகளை மூட்டைக்கட்டி கொண்டு வந்து நடந்து செல்லும் பாதை ஓரம் வீசி தீ வைத்து விடுகின்றனர். அதில் இருந்து ெவளியேறும் நச்சுப்புகை அங்குள்ள மக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. பாதை ஓரம் குப்பைகளை கொட்டுவதையும், அதற்கு தீ வைப்பதையும் தடுக்க வேண்டும்.
-கண்ணன், குடியாத்தம்.
சாலை அமைத்துத்தருவார்களா?
அணைக்கட்டு தாலுகா அத்தியூர் பஞ்சாயத்து பள்ளி தெருவில் 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள சாலை மழைநீரால் சேறும் சகதியுமாக மாறி விட்டது. மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எங்கள் தெருவில் அதிகாரிகள் சாலை அமைத்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
-ராஜா, அத்தியூர்.
மதுபிரியர்களால் போக்குவரத்து இடையூறு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பேரணாம்பட்டு சாலையில் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அந்தக் கடையின் அருகில் மாலை நேரத்தில் மதுபானம் வாங்க வருவோர் சாலையோரம் கும்பலாக நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறார்கள். மதுபானக்கடையை கடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் குறைந்த வேறொரு இடத்துக்கு மாற்றி அமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரா.ேமாகன், ஆம்பூர்.
சாலையோரம் குப்பைகளை கொட்டும் அவலம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படுகின்ற குப்ைபகளை வாகனங்களில் எடுத்து வந்து சோளிங்கர் சாலையில் உள்ள ஒரு பாலத்துக்கு அருகில் கொட்டுகிறார்கள். குப்பைகளை கொட்டுவதற்கென ஒரு இடம் இருக்கும்போது, அங்குக் கொட்டாமல் சாலையோரம் கொட்டுவது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்்கை எடுக்குமா?
-கண்ணதாசன், அரக்கோணம்.
புதிய சாலை போட வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கொருக்கை ஆதிதிராவிடர் காலனிக்கு செல்லும் சாலை தார் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து நடந்து செல்வதற்குக்கூட தகுதியற்ற சாலையாக உள்ளது. சாலை நெடுகிலும் குண்டும் குழியுமாக உள்ளது. ஒரு இடத்தில் சாலையை ஆக்கிரமித்து குப்பைகளை கொட்டி உள்ளனர். மாவட்ட அதிகாரிகள் மெயின் ரோட்டில் இருந்து கிராமம் வரை சர்வே செய்து புதிதாக சாலை போட வேண்டும்.
-மா.கதிர்வேல், கொருக்கை.
குரங்குகள் தொல்லை
ராணிப்பேட்டை மாவட்டம் அன்வர்திகான்பேட்டை கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் நடந்து செல்லும் சிறுவர், சிறுமிகளை குரங்குகள் கடிக்க பாய்கின்றன. வயர்களில் தொங்கி அறுத்து விடுகின்றன. துணிகளை வெயிலில் காய வைத்திருந்தால் தூக்கி செல்கின்றன. வனத்துறையினர் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காட்டில் விட வேண்டும்.
சேகர், அன்வர்திகான்பேட்டை.
பயணிகள் நிழற்குடை பழுது
வாணியம்பாடியை அடுத்த நாட்டறம்பள்ளி ஒன்றியம் மல்லங்குப்பம் கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அந்தக் கட்டிடம் பழுதடைந்துள்ளது. அங்குப் பயணிகள் நிற்க முடியாத நிலை இருந்து வருகிறது. அந்தக் கட்டிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேசன், மல்லங்குப்பம்.
தினத்தந்திக்கு நன்றி
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி செயல்படாமல் இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தச் செய்தி எதிரொலியால் குடிநீர் சுத்திகரிப்பு கருவி சீரமைக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
-சீனிவாசன், கே.வி.குப்பம்.
Related Tags :
Next Story