தொழில் முனைவோருக்கு ரூ.5 கோடி கடன் உதவி
படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் லலிதா கூறினார்.
மயிலாடுதுறை:
படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் லலிதா கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடன் உதவி
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக அனைத்து மாவட்டங்களில் செயல்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ. தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க இந்த திட்டத்தின் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.
ரூ.5 கோடி வரை...
இந்த திட்டத்தின்கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்புரிய ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.75 லட்சம்) அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும்.
கடன் பெறுபவர்களில் பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினரில் பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 5 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோருக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப்பிரிவினருக்கு 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களுக்கு 21 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம். கடனுக்காக விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். இதன்மூலம் பயன் பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கச்சேரி சாலை, மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story