தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை வசதி வேண்டும்
ஒரத்தநாடு அருகே பரவத்தூர் மேற்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் சேதமடைந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பரவத்தூர்
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
தஞ்சை மாவட்டம் செர்மாக்கூர் பஞ்சாயத்தில் வடக்கு மாங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சாலையின் அருகே பல்வேறு குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொட்டப்படும் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், வீட்டில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி வடக்கு மாங்குடி பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், வடக்குமாங்குடி.
பாதையில் உடைத்து வீசப்படும் மதுபாட்டில்கள்
தஞ்சையில் மேம்பாலம் சிவாஜிநகர் அருகிலேயே ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இதன் அருகில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ரெயில் தண்டவாளத்திற்குரிய சிமெண்டு கான்ங்கிரீட் கட்டை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அடுக்கிவைக்கப்பட்டுள்ள இந்த கட்டைகளில் அமர்ந்து சிலர் மது அருந்துகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து பாதையில் விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுமிகள் வெளியில் சென்று வர அச்சப்படுகின்றனர். எனவே ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள சிமெண்டு கட்டை மீது அமர்ந்து மது அருந்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள் , சிவாஜிநகர்.
Related Tags :
Next Story