இடி- மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை
தஞ்சை மாவட்டத்தில் இடி- மின்னலுடன் 1 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் இடி- மின்னலுடன் 1 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
கோடை காலம்
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பகலில் மட்டும் அல்லாது இரவிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து வரும் காற்று கூட அனல் காற்றாகவே வீசுகிறது.
இந்த நிலையில் கோடை வெயிலின் உச்சகட்டமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அக்னி நட்சத்திரம் தொடக்க நாளில் தஞ்சை மாவட்டத்தில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது.
வெளுத்து வாங்கிய மழை
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான அசானி புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. ஒரு சில இடங்களில் லேசான தூறலுடன் மழை பெய்தது.
ஆனால் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காற்று பலமாக வீசியது. ஆனால் நேற்று மீண்டும் வழக்கம் போல வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் வெளுத்து வாங்கியது.
1 மணி நேரம் கொட்டியது
தஞ்சையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இந்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியான கோர்ட்டு சாலை, அண்ணாசிலை, சீனிவாசபுரம், சாந்தப்பிள்ளை கேட் ரெயில்வே கீழ்பாலம், மேரீஸ்கார்னர் ரெயில்வே கீழ்பாலம் பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது.
அதன் பின்னர் மழை தொடர்ந்து லேசான தூறலுடன் பெய்தது. இதே போல் திருவையாறு, செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், வல்லம், நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இந்த மழை காரணமாக வெளியே சென்று இருந்தவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பினர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். 75 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story