செவிலியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை


செவிலியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 15 May 2022 1:27 AM IST (Updated: 15 May 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

செவிலியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

திருவிடைமருதூர்:
செவிலியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். 
மாநில மாநாடு 
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் 6-வது மாநில மாநாடு கும்பகோணத்தில் மாநில தலைவி இந்திரா தலைமையில் நடைபெற்றது.  மாநில செயலாளர் வசந்தா வரவேற்றார். 
இதில்  தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன்,  கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கால் பொதுமக்கள் வெளியில் வந்து சிகிச்சை பெறமுடியாத சூழ்நிலை நிலவியதால் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சையளிக்க வசதியாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வசதியாக காலை 7 மணிக்கே பரிசோதனை செய்ய  நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 செவிலியர்கள் தான்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு 7 ஆயிரத்து 236 பேர் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு நீங்கள் தான் ஆதாரம். உலகமே பேரிடரால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முன்களப்பணியாளர்களாக களத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளது செவிலியர்கள் தான்.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் இருந்தது. பின்னர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் தான் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்தது. தற்போது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 88 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இன்னும் கொரோனா கட்டுப்பாட்டிற்கு வராத சூழ்நிலையில், தமிழகத்தில் கொரோனா  தொற்று பாதிப்பு என்பது 50 பேர் என்றும், உயிரிழப்பு இல்லாத மாநிலமாக திகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் செவிலியர்கள் தான். 
படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை 
செவிலியர்கள் பணிமாறுதலில் பல தவறுகள் நடந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பணிமாறுதலில் சில மாற்றங்கள் செய்தோம். 
பொதுசுகாதாரத்துறையில் தற்போது டாக்டர்கள் முதல் செவிலியர்கள் வரை 13 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் பணிமாறுதல் பெற்றுள்ளனர். 
இந்தாண்டும் கவுன்சிலிங் தொடரும் பணிமாறுதல் பெற்றுக்கொள்ளலாம். ஜூன் மாதம் கண்டிப்பாக பணிமாறுதலுக்கான கவுன்சிலிங் நடக்கும். 
கிரேடு 1, கிரேடு 2 பதவி உயர்வுக்கான பரிசீலனைப்படி நிதித்துறை அலுவலர்களுடன் பேசி விரைவில் சுமூகமான முடிவு எடுக்கப்படும்.
செவிலியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story