அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 25-ந் தேதி ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 25-ந் தேதி(புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கூறினார்.
தஞ்சாவூர்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 25-ந் தேதி(புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கூறினார்.
மாநில உயர்நிலைக்குழு கூட்டம்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சண்முகராஜன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சுருளிராஜன், துணைத் தலைவர்கள் அமிர்தகுமார், துரைப்பாண்டி, அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் சண்முகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டம்
அரசு அலுவலர்களுக்காக செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தற்போதையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை முழுமையாக ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதன் அடிப்படையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 97 சதவீத பேர் தி.மு.க.விற்கு வாக்களித்தோம்.
மிகப்பெரிய ஏமாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி முதல்-அமைச்சரை நாங்கள் சந்தித்தபோது, பொருளாதார நிலைமை தற்போது தான் சீராகி வருகிறது. படிபடியாக உங்கள் கோரிக்கை நிறைவேற்றபடும் என்ற உறுதியளித்தார்.
ஆனால் கடந்த 7-ந் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என கூறியது ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை சட்டசபையில் அறிவிக்கப்பட வேண்டிய நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த அரசு ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆர்ப்பாட்டம்
எங்களது இந்த நியாயமான கோரிக்கையை ஏற்கனவே ஒத்துக் கொண்டபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி வருகிற 25-ந் தேதி(புதன்கிழமை) அனைத்து மாவட்ட தலைநகரங்களில் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தி, முதல்-அமைச்சருக்கு கோரிக்கையை அனுப்ப உள்ளோம்.
தொடர்ந்து தொழிற்சங்களுடன் இணைந்து கருத்தரங்கம், அனைத்து தொழிற்சங்களுடன் கலந்து பேசி தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story