ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி படுகொலை
ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி படுகொலை செய்யப்பட்டார். அவர் பழிக்கு பழியாக தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
ஹாசன்:
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா இரேசாவே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்தப்பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் லிங்கராஜ் என்பவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து இரேசாவே போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 பேரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பெங்களூருவை சேர்ந்த சுதீப் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
முக்கிய குற்றவாளி
இந்த நிலையில், ஹாசன் அருகே கமரஹள்ளி பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஹாசன் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய படத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ஹாசன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
அப்போது அவர், எரியல் எஸ்டேட் அதிபர் லிங்கராஜ் கொலை வழக்கில் இரேசாவே போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பெங்களூருவை சேர்ந்த சுதீப் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஹாசன் புறநகர் மற்றும் இரேசாவே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழிக்கு பழியாக...
இந்த நிலையில் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் அதிபர் லிங்கராஜ் கொலையில், சுதீப் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். இதனால் அவரை கைது செய்ய போலீசார் ஒருபுறம் தேடினாலும், லிங்கராஜின் ஆதரவாளர்களும் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஹாசன் அருகே கமரஹள்ளி பகுதியில் சுதீப் செல்வதை அறிந்த லிங்கராஜின் ஆதரவாளர்கள், அவரை பழிக்கு பழியாக கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ஹாசன் புறநகர் போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story