மதுரை தமுக்கத்தில் பொருட்காட்சி தொடக்கம்
மதுரை தமுக்கத்தில் பொருட்காட்சி தொடங்கியது. அதில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை,
மதுரை தமுக்கத்தில் பொருட்காட்சி தொடங்கியது. அதில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சித்திரை பொருட்காட்சி
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுத்தோறும் தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொருட்காட்சி நடத்தப்பட வில்லை. இந்தாண்டு சித்திரை திருவிழாவின் போது பொருட்காட்சி தொடங்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது சித்திரை திருவிழா முடிந்த நிலையில் அரசு பொருட்காட்சி தமுக்கத்தில் நேற்று தொடங்கியது. அமைச்சர்கள் சாமிநாதன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் பொருட்காட்சியை சுற்றி பார்த்தனர்.
அதன்பின் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:-
திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடைபெறாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 212-வது அரசுப் பொருட்காட்சியாகும்.
27 அரசு துறைகள்
இந்த பொருட்காட்சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அரங்கிலும் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பறைசாற்றும் வகையில் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பிலும், திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பாக குறளோவிய கண்காட்சி அரங்கு உள்ளிட்ட சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
45 நாட்கள்
அதேபோல, சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்துடன் பங்கேற்று மகிழ பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்பொருள் விற்பனை அங்காடி போன்ற 15 தனியார் அரங்குகளும், சிற்றுண்டி விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் மாலையில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. அந்தவகையில் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்காட்சி மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும். இந்த பொருட்காட்சி நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story