ஈரோட்டில் பரபரப்பு: லாட்டரி சீட்டு வாங்கி ரூ.62 லட்சம் இழந்த வியாபாரி தற்கொலை


ஈரோட்டில் பரபரப்பு: லாட்டரி சீட்டு வாங்கி ரூ.62 லட்சம் இழந்த வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 15 May 2022 2:39 AM IST (Updated: 15 May 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் லாட்டரி சீட்டு வாங்கி ரூ.62 லட்சம் இழந்த வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு
ஈரோட்டில் லாட்டரி சீட்டு வாங்கி ரூ.62 லட்சம் இழந்த வியாபாரி தற்கொலை செய்துகொண்டார். 
நூல் வியாபாரி
ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த நூல் வியாபாரி ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கி ரூ.62 லட்சத்தை இழந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஈரோடு எல்லப்பாளையம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 56). இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு திவ்யபாரதி, ஆனந்தி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் கணவர் இறந்ததால் திவ்யபாரதி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆனந்தி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.
தூக்குப்போட்டு தற்கொலை
ஆரம்ப காலத்தில் ராதாகிருஷ்ணன் தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நூல் வியாபாரம் (கமிஷன் ஏஜெண்டு) செய்து வந்தார். ராதாகிருஷ்ணனுக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்து உள்ளது. இதனால் அவர் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் தொடர்ந்து லாட்டரி வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை உருக்கமான வீடியோ ஒன்றை செல்போனில் பதிவிட்டு அதை தன்னுடைய நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிய ராதாகிருஷ்ணன் பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரூ.62 லட்சம் இழப்பு
அந்த வீடியோவில் ‘கருங்கல்பாளையத்தை சேர்ந்த தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவரிடம் லாட்டரி வாங்கி ரூ.62 லட்சம் இழந்ததாகவும், உயிருடன் இருந்தால் இன்னும் பணத்தை இழந்து விடுவேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய தகவல் தெரிந்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராதாகிருஷ்ணன் எப்படி லாட்டரி சீட்டு வாங்கி ரூ.62 லட்சத்தை இழந்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story