நடுரோட்டில் டிரைவரை அரிவாளால் வெட்டிய பஸ் கண்டக்டர்


நடுரோட்டில் டிரைவரை அரிவாளால் வெட்டிய பஸ் கண்டக்டர்
x
தினத்தந்தி 15 May 2022 2:43 AM IST (Updated: 15 May 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பயணிகளை ஏற்றிச்செல்வதில் ஏற்பட்ட தகராறில் நடுரோட்டில் டிரைவரை அரிவாளால் வெட்டிய மற்றொரு பஸ் கண்டக்டரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:
நெல்லையில் பயணிகளை ஏற்றிச்செல்வதில் ஏற்பட்ட தகராறில் நடுரோட்டில் டிரைவரை அரிவாளால் வெட்டிய மற்றொரு பஸ் கண்டக்டரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் பஸ் கண்டக்டா்
நெல்லை அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
பாளையங்கோட்டை கே.டி.சி.நகரைச் சேர்ந்தவர் சங்கரபாண்டி (34). இவர் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக உள்ளார். அதே பஸ்சில் நெல்லை டவுனை சேர்ந்த இசக்கிபாண்டி (24) என்பவர் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

மோதல்
சுபாசுக்கும், இசக்கிபாண்டிக்கும் தங்கள் பஸ்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபாஷ் கண்டக்டராக இருக்கும் பஸ், சங்கரபாண்டி, இசக்கி பாண்டி ஆகியோரின் பஸ்சை முந்திச்சென்று நெல்லை வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நின்றது.
அப்போது சங்கரபாண்டி, இசக்கிபாண்டி ஆகியோர் சுபாசை கண்டித்தனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் சுபாசை அவரது பஸ் உரிமையாளர் வசூல் குறைவாக இருக்கிறதே என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சங்கரபாண்டி, இசக்கிபாண்டி ஆகியோர் மீது சுபாஷ் ஆத்திரத்தில் இருந்தார். 

அரிவாள் வெட்டு
இந்த நிலையில் நேற்று காலையில் சுபாஷ் வேலையை முடித்து விட்டு வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். இதேபோல் சங்கரபாண்டி, இசக்கிபாண்டி ஆகியோரும் வேலை முடிந்து அதே பஸ் நிறுத்தத்திற்கு சாலையில் வந்தனர்.
அப்போது, திடீரென்று சுபாஷ் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சங்கரபாண்டியின் தலையில் வெட்ட ஓங்கினார். அவர் சுதாரித்துக் கொண்டு தடுக்கவே லேசான வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த சங்கரபாண்டியை  அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மடக்கி பிடித்த போலீஸ்
இதையடுத்து அங்கிருந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு அருணாசலம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். இதைப்பார்த்த சுபாஷ் அங்கு நின்ற ஒரு பஸ்சில் ஏறினார். ஆனால் அவர் அரிவாள் வைத்திருந்ததை பார்த்த அந்த பஸ் கண்டக்டர் அவரை நடுவழியில் இறக்கி விட்டு விட்டார். பஸ்சில் இருந்து கீழே இறங்கிய சுபாஷ் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி தொங்கி சென்றார். 
இதைக்கண்ட போக்குவரத்து ஏட்டு அருணாசலம், ஆட்டோவை விரட்டிச் சென்று சுபாைச மடக்கி பிடித்தார். அவரிடம் இருந்து அரிவாளும் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவர் நெல்லை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், பாளையங்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணை
பின்னர் சுபாசை பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story