கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக நிர்மலா சீதாராமன் மீண்டும் தேர்வாகிறார்


கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக நிர்மலா சீதாராமன் மீண்டும் தேர்வாகிறார்
x
தினத்தந்தி 15 May 2022 3:08 AM IST (Updated: 15 May 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக நிர்மலா சீதாராமனை மீண்டும் தேர்வு செய்வது என பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

  பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மேலிட பொறுப்பாளர் அருண்சிங், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், மந்திரிகள் ஸ்ரீராமுலு, அஸ்வத் நாராயண், கோவிந்த் கார்ஜோள், முன்னாள் துணை முதல்-மந்திரிகள் ஈசுவரப்பா, லட்சுமண் சவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  இந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் காலியாகும் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்கள் தேர்வு, கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 7 உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர் தேர்வு, ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

நிர்மலா சீதாராமன் தேர்வு

  அப்போது ஏற்கனவே கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் கே.சி.ராமமூர்த்தியை மீண்டும் தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் இருப்பதால், இந்த முறையும் அவரை கர்நாடகத்தில் இருந்தே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

  அதுபோல், 3-வது இடத்திற்கு விஜய சங்கேஷ்வரை நிறுத்துவது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 3-வது வேட்பாளரை நிறுத்தினால், பா.ஜனதா வெற்றி பெற 13 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது. இதனால் 3-வது வேட்பாளரை நிறுத்திவிட்டு, ஜனதாதளம்(எஸ்) கட்சியின் ஆதரவை பெற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நிர்மலா சீதாராமன், கே.சி.ராமமூர்த்தி, விஜய சங்கேஷ்வர் ஆகிய 3 பேரின் பெயர்களை சிபாரிசு செய்து, பா.ஜனதாவின் மேலிட தேர்தல் பிரிவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய முகங்களுக்கு வாய்ப்பு

  இதுபோல், கர்நாடக மேல்-சபையில் காலியாக இருக்கும் 7 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் பா.ஜனதாவின் எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் மூலமாக போட்டியிட 4 வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜனதாவுக்காக உண்மையாக உழைத்து வருபவருக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் சீட் வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  இதன்மூலம் மேல்-சபை தேர்தலில் புதிய முகங்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆசிரியர்-பட்டதாரி தொகுதிக்கான தேர்தலில் மேல்-சபை தலைவராக உள்ள பசவராஜ் ஹொரட்டிக்கு சீட் வழங்குவது என்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேல்-சபை உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் சிலரின்
பெயர்களை தேர்வு செய்து, பா.ஜனதா மேலிடத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேஜஸ்வினி அனந்தகுமார்

  அதன்படி லட்சுமண் சவதி, தேஜஸ்வினி அனந்தகுமார், செலுவாதி நாராயணசாமி, ஜெகதீஷ் கிரேமணி, விஜயேந்திரா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோரின் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மந்திரி சபை விரிவாக்கம், பழைய மைசூரு பகுதிகளில் பா.ஜனதாவை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

  அத்துடன் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்தும், அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

Next Story