கோவிலில் மீண்டும் திருவிழா நடத்த பொதுமக்கள் கோரிக்கை


கோவிலில் மீண்டும் திருவிழா நடத்த பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 May 2022 3:19 AM IST (Updated: 15 May 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் மீண்டும் திருவிழா நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கோவிலில் திருவிழா நடந்தது. அப்போது சாமி கும்பிடுவதில் இருதரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால், கோட்டாட்சியர் பரிமளம் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஸ்ரீதர் கோவிலை பூட்டினார். இதையடுத்து திருவிழாவை தொடர்ந்து நடத்தக்கோரி ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்க மாரியம்மன் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்நிலையில் கோவில் முன்பு நேற்று ஊர்க்கூட்டம் நடைபெற்றது. இதில், திருவிழாவில் புதிதாக தனித்தனி நபர்களுக்கு என மண்டகப்படி கொடுத்தால் அனைவரும் மண்டகப்படி கேட்டு திருவிழா நடத்துவதில் பிரச்சினை ஏற்படும். எனவே பழைய வழக்க முறைப்படியே திருவிழா நடைபெற வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பல ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஊருக்கு வந்தவர்கள், திருவிழா முடிந்த பிறகு காப்பு அறுத்தால் மட்டுமே வெளியூர்களுக்கு செல்லவும், சுப நிகழ்ச்சிகள் நடத்தவும் முடியும் என்பது சம்பிரதாயமாக நடைமுறையில் உள்ளது. எனவே திருவிழாவை எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு திருவிழாவை சிறப்பாக நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்று தத்தனூர் பொட்டக்கொல்லை பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story