இடி, மின்னலுடன் பலத்த மழை
இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அரியலூர்:
பலத்த மழை
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ெவயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இடையிடையே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், அரியலூரில் ேநற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் அரியலூரில் அதிக அளவில் வெயில் அடித்தது. ஆனால் மாலை 4 மணிக்கு மேல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் சிறு தூறலாக மழை பெய்ய தொடங்கியது.
இதையடுத்து இடி, மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு சென்று திரும்பிய தொழிலாளர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. ஒருசில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மின்தடை
கழிவுநீர் வாய்க்கால்களில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்ததால் மழைநீர் தேங்கி சாலையில் ஓடத் தொடங்கியது. இதனால் பல இடங்களில் துர்நாற்றம் வீசியது. அக்னி நட்சத்திரத்தில் பலத்த மழை பெய்ததால் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும், இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், கோடை விவசாயம் செய்து வருபவர்களுக்கு இந்த மழை உபயோகம் உள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். இடி, மின்னல் அதிகமாக இருந்ததால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபட்டது.
தா.பழூர்
இதேபோல் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி வரை வெயில் அடித்தது. பின்னர் திடீரென வானில் கருமேகங்கள் சூழத் தொடங்கின. மாலை 5 மணி முதல் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நிலக்கடலை விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டநிலையில், தற்போது பெய்த மழையால் விதை முளைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
விதைப்பதற்கு உழவு செய்து தயார் நிலையில் இருந்த கடலை வயல்களில் மழை காரணமாக இன்னும் ஒரு வாரம் விதைப்பு பணி தாமதமாக தொடங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதேபோல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த எள் பயிர்களுக்கும், நவரை பட்ட நடவு பணி நடைபெற்று வரும் நிலையில் நெல் வயல்களுக்கும் இந்த மழை நல்ல பலனைத்தரும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
உடையார்பாளையம்
உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் உடையார்பாளையம், கழுமங்கலம், முனையதரியன்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், சோழங்குறிச்சி, தத்தனூர், வெண்மான்கொண்டான், மனகெதி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி காக்கா பாளையம், நடுவலூர், பருக்கல், வாணத்திரையான்பட்டிணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் முந்திரி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story