5 மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அம்மன் சிரசு


5 மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அம்மன் சிரசு
x
தினத்தந்தி 15 May 2022 5:25 PM IST (Updated: 15 May 2022 5:25 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழா நேற்று நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் 5 மணி நேரம் சிரசு ஊரிவலமாக எடுத்து செல்லப்பட்டது.

குடியாத்தம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழா நேற்று நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் 5 மணி நேரம் சிரசு ஊரிவலமாக எடுத்து செல்லப்பட்டது.

கெங்கையம்மன் கோவில் திருவிழா

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் வேலூர் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் வட மாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பல வெளிநாடுகளிலிருந்தும் கலந்து கொள்வார்கள்.

திருவிழாவுக்காக குடியாத்தம் நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருக்கும். கோவிலை ஒட்டியுள்ள கவுண்டன்ய மகாநதி ஆற்றில் திருவிழாவுக்கு முன்னதாகவே நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டு திருவிழா முடிந்து 15 நாட்களுக்கும் மேலாக கடைகள் இருக்கும்.

தேரோட்டம் 

கடந்த இரண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கெங்கையம்மன் சிரசு திருவிழா கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் தேர்த்திருவிழா, கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  தேர் திருவிழா நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிரசு ஊர்வலம்
இதனைத் தொடர்ந்து அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து நீலிகோவிந்தப்ப செட்டிதெரு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி கெங்கையம்மன் சிரசு கோவிலை சென்றடைந்தது. வழிநெடுகிலும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் தேங்காய்களை உடைத்தனர். திரும்பும் திசையெல்லாம் வீடுகளிலும், மாடிகளிலும், சாலைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. 

தொடர்ந்து ஊர்வலமாக பக்தர் வெள்ளத்தில் மிதந்து சென்ற கெங்கையம்மன் சிரசு கோவிலை வந்தடைந்ததும், மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

சிரசு திருவிழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலு விஜயன், நகரமன்றத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நத்தம்பிரதீஷ், நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, தாசில்தார் லலிதா, கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, அரசு வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார் உள்பட வருவாய்த்துறையினர், நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

காலை முதலே அன்னதானமும், குளிர்பானங்கள், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது.
வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடிருந்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் ஜெயா, கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், கவுரவ தர்மகத்தா கே.பிச்சாண்டி உள்பட விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

கோயிலுக்குள் செல்ல பக்தர்கள் அவதி

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்குள் சென்று வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்திலும், ஆய்வுப் பணியின்போதும் காவல்துறையினர், வருவாய்த்துறையினர், கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசித்து வெளியே வர மிகவும் சிரமப்பட்டனர். பெண்கள், குழந்தைகளை கொண்டுவந்தவர்கள் மிகவும் அவதியுற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பக்தர்கள் நெரிசலை கண்டு அவரே நெரிசலை ஒழுங்குபடுத்தி பக்தர்களை பாதுகாப்புடன் கோவிலை விட்டு வெளியே அனுப்பி வைத்தார். 

5 மணி நேரம்

5 மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற அம்மன் சிரசு
காலையில் சிரசு ஊர்வலம் தொடங்கும் முத்தாலம்மன் கோவிலில் இருந்து கங்கையம்மன் கோவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேற்று காலை 5 மணிக்கு சிரசு ஊர்வலம் புறப்பட்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவை சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்று கோவிலை அடைந்தது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் இருந்தது. குறைந்தபட்சம் 5 லட்சம் பக்தர்கள் திரண்டிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Next Story