வேலூர் ஜெயிலில் முருகன் 15-வது நாளாக உண்ணாவிரதம்
பரோல் வழங்கக்கோரி வேலூர் ஜெயிலில் முருகன் 15-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
பரோல் வழங்கக்கோரி வேலூர் ஜெயிலில் முருகன் 15-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரோல் வழங்க கோரிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் வந்துள்ள அவர் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கி உள்ளார். முருகன் தனக்கு பரோல் வழங்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். மேலும் சட்ட போராட்டமும் நடத்தி வருகிறார். ஆனால் அவருக்கு இதுவரை பரோல் வழங்கப்படவில்லை.
முருகன் 6 நாட்கள் பரோல் வழங்கக்கோரி கடந்த மாதம் ஜெயில் அதிகாரிகளிடம் மனு அளித்தார். ஆனால் ஜெயிலில் செல்போன் பயன்படுத்தியதாக அவர் மீது 2 வழக்குகள் பாகாயம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி பரோல் மறுக்கப்பட்டது. அதனால் விரக்தி அடைந்த முருகன் பரோல் வழங்கக்கோரி கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
15-வது நாளாக உண்ணாவிரதம்
அவர் 15-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். உண்ணாவிரதத்தை கைவிடும்படி ஜெயில் அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதனை ஏற்க மறுத்து முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், முருகனின் உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள் தினமும் பரிசோதனை செய்து வருகிறார்கள். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஜெயில் சார்பில் வழங்கப்படும் உணவுப்பொருட்களை அவர் ஏற்க மறுத்து விட்டார். மாறாக பழங்கள் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்கிறார். முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக குளுக்கோஸ் ஏற்றப்படும். சிறை காவலர்கள் முருகனை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடும்படி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story